Saturday, May 30, 2015

பலாக்கொட்டை


பலம் தரும் பலாக்கொட்டை
நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் 
ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை 
விதவிதமான உணவாக சமைத்து உண்பது நம் பாரம்பரிய வழக்கம். 
அசைவ உணவை போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் 
பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.
பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் 
உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் 
பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் 
உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து 
சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், 
ஆண்களின் வலிமையைப் பெருக்கும் தன்மை உள்ளதுதான் 
பலாக்கொட்டை.”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற 
தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த 
பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது.

100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. 
இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி 
போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற 
தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், 
ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, 
செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை. 
இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் 
நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. 
அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் 
பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் 
கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.

பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். 
விதைகளை நன்கு உலர்த்தி, மைய அரைத்து, கோதுமை மாவுடன் 
கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம். 
தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, 
பட்டர்பீன்ஸ்-20,
உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் 
ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள 
வேண்டும். தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு 
ஆகியவற்றை நீர்விட்டு மைய அரைத்து, வெந்த பலாக்கொட்டை 
கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் 
அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் 
சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் 
குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் 
உண்டாகும். பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் 
உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் 
வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் 
குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே 
நல்லது.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

சில குறிப்பு:

தொடர்ச்சியான முடி உதிர்வு, தலையில் அரிப்பு போன்ற தொந்தரவால் 
துவண்டு போகிறவர்களுக்குப் பலன் தருகிறது பலாக்கொட்டை. இதை 
காயவைத்து பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பவுடர் அரை 
டீஸ்பூன், பயத்தமாவு ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் 2 டீஸ்பூன்... இந்த 
மூன்றையும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் சேர்த்துக் குழைக்க 
வேண்டும். தேவைப்பட்டால் அதில் சிறிது வெந்நீரையும் சேர்த்து, 
தலையில் பூசி 10 நிமிடம் ஊறவிடுங்கள். பிறகு சீயக்காய் அல்லது 
ஷாம்பூவால் தலையை அலசினால் அரிப்பு குறைந்து, முடி கொட்டுவது 
நிற்கும். அடுத்து முடி வளர ஆரம்பிக்கும்.

பலாக்கொட்டையில் சில உணவுகள் ...
பலாக்கொட்டை பிரட்டல்
தேவையான பொருட்கள்
பலாகொட்டை - 15
வெங்காயம் -1
பச்சைமிளகாய்-1
கடுகு -1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி - சிறிது
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன்
கறிமசாலா பவுடர் -1டீஸ்பூன் (விரும்பினால்)
தண்ணீர்-11/2 கப்
உப்பு
எண்ணெய்
விழுதாக அரைக்க
வரமிளகாய் - 4
தேங்காய்த் துருவல்-1/4கப்
செய்முறை
பலாக்கொட்டையில் மேலுள்ள தோலை உரித்தபிறகே சமைக்கவேண்டும்.
இதைச் செய்கையில் கவனமாக உரிக்கவேண்டும், கொஞ்சம் ஏமாந்தாலும் பலாக்கொட்டையின் தோல் ஊசிபோல நகக்கண்ணில் ஏறிவிடும். எளிய வழி, அம்மிக்கல்லில் கொட்டைகளை தட்டி, உடைப்பது. உடைத்த பலாக்கொட்டைகளின் தோலை எளிதாக எடுத்துவிடலாம்.
பலாக் கொட்டைகளை தோலை உரித்து நறுக்கி வைக்கவும்.
ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
தேங்காய்- வரமிளகாயை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு, கடுகு-க.பருப்பு-உ.பருப்பு தாளிக்கவும். பருப்புகள் பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் பலாக்கொட்டை, மஞ்சள்தூள் சேர்த்து சிலநிமிடம் வதக்கவும்.
பிறகு அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்க்கவும்.
ஒண்ணரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பலாக்கொட்டை வெந்ததும், கறிமசால் பொடி சேர்த்து தண்ணீர் வற்றி, பிரட்டலாக வரும்வரை சிறுதீயில் வதக்கி, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான பலாக்கொட்டை பிரட்டல் கறி தயார். சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
குறிப்பு
பலாக்கொட்டையை நேரடியாக வேகவிட்டால் கொஞ்சம் நேரம் எடுத்து வேகும். அவசரமாக சமையல் செய்கையில் பலாக்கொட்டையை குக்கரில் வேகவைத்து எடுத்து பிரட்டலில் சேர்க்கலாம்

பலாக்கொட்டை-மாங்காய் சாம்பார்
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு-1/2 கப்
பலாக்கொட்டை-12 எண்ணிக்கையில்
மாங்காய்-1
சின்ன வெங்காயம்-10
தக்காளி-1
புளி- சிறு உருண்டை
பூண்டு-2 பற்கள்
மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்-3 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ-ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை-1 கொத்து
உப்பு-தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்-2 டீஸ்பூன்
கடுகு,உளுந்து,சீரகம்,வெந்தயம்-தேவையான அளவு
காய்ந்த மிளகாய்-1
பெருங்காயம்-சிறிது
கறிவேப்பிலை-சிறிது
செய்முறை:
ஒரு குக்கரில் (அ) பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு , பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
பலாக்கொட்டையின் மேல் தோலை எடுத்துவிட்டு நீரில் போட்டு ஊற வைக்கவும்.தோல் எடுக்கும்போது கவனமாக எடுக்கவும்.இல்லையென்றால் நகக்கண்ணில் பட்டுவிடும்.
ஒரு 10 நிமி. ஊறினால் போதும்.அதன் மற்றொரு தோலையும் நகத்தால் சுரண்டி எடுத்துவிடலாம்.
மாங்காயை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.
புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.வேண்டும் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
உப்பு,காரம் சரிப்பார்த்து மூடி கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் பலாக்கொட்டைகளைப் போட்டு மூடி வேக வைக்கவும்.
நன்றாகக் கொதித்து பலாக்கொட்டைகள் பாதி வெந்த நிலையில் மாங்காய் துண்டுகளைப் போட்டு மூடி வேக வைக்கவும்.
இறுதியாக புளியைக் கரைத்து ஊற்றி கொதித்ததும் தேங்காய்ப் பூ, கொத்துமல்லி தூவி இறக்கவும்.தேங்காய்ப் பூ இல்லாவிடில் பரவாயில்லை.
இப்போது பலாக்கொட்டை-மாங்காய் சாம்பார் தயார்.
இது சாதம்,இட்லி,தோசை,பொங்கல் இவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்
.

பலாக் கொட்டை உருண்டை
தேவையான பொருட்கள்:
பலாக் கொட்டைகள்-30; கடலை மாவு-300கிராம்; பச்சை மிளகாய்-4; மிளகாய்த்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை; எண்ணெய்; உப்பு.
செய்முறை:
பலாக் கொட்டையை நன்கு அவிக்கவும். பின்னர், மேல்தோலை அகற்றிவிட்டு, மிக்ஸியில் அரைக்கவும். அல்லது மத்தால் மசிக்கவும். கடலை மாவை சலித்து, பலாக்கொட்டை மசியலை சேர்த்து சிறிதளவு தண்ணீரில் நன்கு கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். மிளகாய்த்தூள, உப்பு சேர்க்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை , கொத்தமல்லித் தழையை நறுக்கி கலந்து வைக்கவும்.
15 நிமிடம் கழித்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை மாவு-பலாக் கொட்டை மசியலை சிறுசிறு உருண்டைகளாக பிடித்துப் போட்டு பொன்நிறமாக வெந்ததும் எடுக்கவும். மொறுமொறு பலாக்கொட்டை உருண்டை தயார்.
மதியம் சோறுடனும் சாப்பிடலாம். மாலை நேரச் சிற்றுண்டிக்கும் ஏற்றது
.

பலாக்கொட்டைப் பொரியல்
தேவையானவை:
பலாக்கொட்டை-சுமார் 20 எண்ணிக்கை
மிளகாய்த்தூள்-ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள்-சிறிது
உப்பு-தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
பலாக்கொட்டையை சமைக்குமுன் மேலேயுள்ள ஷெல் போன்ற பகுதியை எடுத்துவிட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.இது ப்ரௌன் நிறத்தினாலான மற்றொரு தோலை எடுப்பதற்கு.
ஊறியதும் அதன் தோலை கட்டைவிரல் நகத்தால் உரித்தோ அல்லது சுரண்டியோ எடுத்துவிடவும்.சில மென்மையான பகுதிகளில் தோல் எடுக்க வராது.அதை விட்டுவிடலாம்.
பிறகு விருப்பமான அளவில் நறுக்கிக்கொள்ளவும்.அல்லது முழு அளவிலேயே போட்டுக்கொள்ளலாம்.பார்க்க சிறுசிறு முட்டைகள் போல் இருக்கும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு பலாக்கொட்டைகளைப் போட்டு ஒரு கிளறி கிளறி மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துப் பிரட்டிவிட்டு பலாக்கொட்டை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மூடி வேகவைக்கவும்.
அது நன்றாக வெந்து வரும்வரை இடையிடையே கிண்டிவிடவும்.தண்ணீர் வற்றி,நன்றாக வெந்ததும் இறக்கவும்.இது எல்லா சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.
விருப்பமானால் தேங்காய்ப்பூ,கொத்துமல்லி தூவி இறக்கலாம்

பலாக்கொட்டை-பயற்றங்காய் பிரட்டல்
தேவையானவை:
பயற்றங்காய் - ¼ கிலோ
பலாக்கொட்டை – 10
சின்ன வெங்காயம் – 5(அ) 6
பச்சை மிளகாய் – 1
வெந்தயம் – ½ டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன்
தனியா தூள் – ½ டீ ஸ்பூன்
சீரகத் தூள் – ½ டீ ஸ்பூன்
தேங்காய்ப்பால் – 1 ½ கப்
எலுமிச்சை சாறு – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணை – 2 டீ ஸ்பூன்
கடுகு – ½ டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- ½ டீ ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 4-5
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
பலாக்கொட்டையின் மேல் தோலை நீக்கிவிடுங்கள். உட் தோலை விரும்பாதுவிட்டால் தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு தோலைச் சுரண்டி எடுத்துவிடுங்கள். ஆனால் அதில் அதிக ஊட்டச் சத்து உள்ளதை மறந்து விடாதீர்கள்.
பாலாக்கொட்டையை பாதியாக நீளவாட்டில் வெட்டி வையுங்கள்.
வெங்காயம் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
பச்சை மிளகாயை இரண்டு துண்டுகளாக வெட்டி விடுங்கள்.
வாணலியில் காய், பலாக்கொட்டை, வெட்டிய வெங்காயம் மிளகாய் இவற்றுடன் வெந்தயம், உப்பு, தூள் வகைகள் சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றி கலக்கி இறுக்கமான மூடி போட்டு அவியவிடுங்கள்.
பத்து நிமிடங்களின் பின் திறந்து தட்டைக் கரண்டியால் பிரட்டிவிட்டு, தீயை சற்றுக் குறைத்து வையுங்கள்.
இரண்டு நிமிடங்களின் பின் மூடியைத் திறந்து பிரட்டிவிடுங்கள்.
தீயை நன்றாகக் குறைத்து வைத்து காய் நன்கு வரண்டு வர தீயை அணைத்து எலுமிச்சம் சாறு விட்டு பிரட்டி இறக்குங்கள்.
தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, சமைத்த காய்களைக் கொட்டி ஒரு தடவை பிரட்டி இறக்கிவிடுங்கள்.
கமகம மணத்துடன் பலாக்கொட்டை-பயற்றங்காய் பிரட்டல் தயார்.

உருளைக்கிழங்கு பலாக்கொட்டை மசாலா
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3
பலாக்கொட்டை - 25
பெரிய வெங்காயம் - 2 (சிறியது) / 1 (பெரியது)
தேங்காய்த்துருவல் - 3 மேசைக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
பட்டை - 2 சிறிய துண்டு
கிராம்பு - 2
பூண்டு - 2 சிறிய பல் / 1 பெரிய பல்
கொத்துமல்லித்தழை - (பொடிதாக நறுக்கியது) 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கையும், பலாக்கொட்டையும் வேகவைத்துத் தோலுரித்துச் சிறு துண்டுகளாக்கவும். (பலாக்கொட்டைக்கு அரைவேக்காடு போதுமானது.)
வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடியும், உப்பும் சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றவும்.
பின் உருளைக்கிழங்கும், பலாக்கொட்டையும் சேர்த்துக் கிளறி விடவும். அவ்வப்போது போதிய இடைவெளியில் கிளறி விடவும். முக்கால் பதம் வந்துள்ளபோது தேங்காய், சோம்பு விழுதாக அரைத்துச் சேர்க்கவும். பூண்டை நன்றாகத் தட்டிச் சேர்த்துக் கிளறவும்.
ஈரப்பதம் போகும் வரை வதக்கவும். கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.
நன்றி: திருமதி. பத்மா, அம்மா


பலாக்கொட்டை பொடிமாஸ்
தேவையானவை:
பலாக்கொட்டை - 15
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - 3/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
உப்பு - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பலாக்கொட்டையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேக வைத்த பலாக்கொட்டையின் தோல்களை உரித்து கொள்ளவும். சின்ன வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வேக வைத்து தோல் உரித்த பலாக்கொட்டையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதில் பொடி செய்து வைத்திருக்கும் பலாக்கொட்டையை போட்டு எல்லாம் ஒன்றாக சேரும்படி கிளறி விடவும்.
இந்த கலவையுடன் தேங்காய் துருவல் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
எளிதாக செய்யக்கூடிய பலாக்கொட்டை பொடிமாஸ் தயார்.
நன்றி: திருமதி. பத்மா /திருமதி. பார்வதி
கத்தரிக்காய் -பலாக்கொட்டை புளிப்பு கூட்டு
தேவையானவை:
பிஞ்சு கத்தரிக்காய் - 1/4 கிலோ,
பலாக்கொட்டை - 8,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்.
வறுத்து அரைக்க...
க.பருப்பு, தனியா - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1,
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் (எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் வறுத்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்).
தாளிக்க...
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1.
செய்முறை:
பலாக்கொட்டைகளை நன்றாக தட்டி தோலுடன் வேக வைக்கவும். ஆறிய பிறகு தோலை உரித்து எடுத்து விட்டு பலாக்கொட்டைகளை தனியே வைக்கவும். கத்தரிக்காயை துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் வேக வைத்துக் கொள்ளவும்.கடாயில் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, அதில் புளிக்கரைசலை கொட்டி கொதிக்க விடவும்.
கொதி வரும் போது மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் தூள் போட்டு கொதிக்க விடவும். பின்பு வேக வைத்த பலாக்கொட்டை, கத்தரிக்காயை சேர்க்கவும். அத்துடன் வறுத்து அரைத்த பொடி சேர்த்து 5 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கவும். இறக்கும் போது 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்க்கவும்.

பலாக்கொட்டை சோயாப் பொரியல்
தேவை:
பலாக்கொட்டை 15,
சோயா 10 உருண்டைகள்,
பெரிய வெங்காயம் 2,
தக்காளி 4,
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்,
எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்,
கடுகு, உளுந்து, சோம்பு தலா அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை:
பலாக்கொட்டையை உப்பு சேர்த்து வேகவைத்து இரண்டாக நறுக்குங்கள். சோயாவை கொதி நீரில் இரண்டு நிமிடம் வைத்திருந்து அலசி எடுத்து, பிறகு குளிர்ந்த நீரில் போட்டு இரண்டு மூன்று முறை நன்கு அலசிப் பிழிந்து, இரண்டாக நறுக்கி வையுங்கள். வெங்காயம், தக்காளியை சன்னமாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, பலாக்கொட்டை சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். கடைசியாக சோயா, கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.
/

No comments:

Post a Comment