Friday, August 12, 2016

உளுந்து Black Gram

இட்லி, தோசை இல்லாத ஒரு நாளையோ, உளுந்து வடை இல்லாத விசேஷ நாட்களையோ நினைத்துப் பார்க்க முடியுமா? இந்த மூன்றுக்கும் அடிப்படை உளுந்து. இந்தப் பண்டங்கள் அனைத்தும் கோயில் பிரசாதமாக முதலில் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக உளுந்து எனப்பட்டாலும், தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. நீள்உருளை வடிவத்தில், பளபளப்பாக இருக்கும் இது தனி நறுமணம் அற்றது. அதேநேரம் மண் வாசம் அதிகமாகவே இருக்கும். இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் - அதிகம் பயன்படுத்தப்படும் பயறு வகை இதுவே. பஞ்சாபி உணவு வகையிலும் இது மிகவும் பிரபலம்.

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் Leuconostoc mesenteroides என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாமே.

பயன்பாடு

கறுப்பு உளுந்து முழுதாகவோ, இரண்டாக உடைக்கப்பட்டோ அரைக்கப்பட்டு இட்லி, தோசை மாவில் பயன்படுத்தப்படுகிறது. இட்லி சிறந்த உணவு என்ற பெயரைப் பெறுவதற்கு, மாவில் சேர்க்கப்படும் உளுந்தும் மிக முக்கிய காரணமாகிறது. வடஇந்தியாவில் தால் மக்கானிக்கு இதுவே அடிப்படை. வெங்காயம், பூண்டுடன் சேர்த்து உளுந்து வறுக்கப்பட்டு நொறுவையாகச் சாப்பிடப்படுவதும் உண்டு. அதேபோல, பச்சை உளுந்தை மாவாக்கித் தேன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், உடல் வலிமை பெறும்.

ஊட்டச்சத்து

இனிப்புச் சுவையோடு குளிர்ச்சித் தன்மையையும் கொண்டிருப்பதால் வேனிற் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தலாம். பித்தத்தைத் தணிக்க உதவும்.

# முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு நல்லது.

# நிறைந்த இது, பெண்களின் உடலுக்கு வலுவைத் தரும் என்பதால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.

# உடலைத் தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுகிறது.

# செரிமான அமைப்பை ஆரோக்கியமாகப் பராமரிக்கவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவுகிறது.

# கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். எனவே, உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்துவந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.

தெரியுமா?

இந்தியாவின் பல பகுதிகளில் உளுந்துத் தட்டை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

மாதவிடாய் வலி நீக்கும் வெள்ளை உளுந்து

வெள்ளை உளுந்துதான் தற்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இட்லி, தோசை, வடை போன்றவை வெள்ளையாக இருக்க வேண்டுமென்று உணவகங்கள் நினைத்த காரணத்தால், வெள்ளை உளுந்து பிரபலமாகி இருக்கலாம்.

பயன்பாடு

அரிசியோடு சேர்த்து மாவாக அரைக்கப்பட்டு இட்லி தோசைக்கும், தனியாக அரைக்கப்பட்டு வடைக்கும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மங்கள நிகழ்வுகளில் ’உளுத்தஞ்சோறு’ நெடுங்காலமாக இடம்பெற்றுவருவதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

ஊட்டச்சத்து



# வெள்ளை உளுந்தில் கறுப்பு உளுந்தைவிடச் சற்றே ஊட்டச்சத்து குறைவு. இதில் கார்போஹைட்ரேட்டும் புரதமும் இருக்கின்றன.

# இது தரும் சக்தியும் கொழுப்பும் ஆரோக்கியமான மனித உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

# உளுந்தங்களி பெண்களுக்கு உகந்தது. மாதவிடாயைச் சீராக்குவது மட்டுமில்லாமல் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.

# தாய்ப்பால் பெருக்க உளுந்து பயன்படும். ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு, உளுந்து மாவைக் கொடுக்கலாம். மலத்தை வெளித் தள்ளவும் உதவுகிறது.

# தோல் நீக்கப்பட்ட உளுந்து, பாலுணர்வைத் தூண்டக்கூடியதாகக் கருதப்படுகிறது.

இதை அதிகமாகச் சாப்பிடுவது வாயுவை ஏற்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் இதில் ஆக்சாலிக் அமிலம் இருப்பதால், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.

பண்டைய பெயர்: மாடம், மாஷம்

தாவரவியல் பெயர்: Vigna mungo

ஆங்கிலப் பெயர்: Urad Dha#/ Black Gram

ஆங்கிலப் பெயர்: Husked black gram/ Husked urad dha#

# மெலிந்த உடலைப் பருக்கச் செய்ய உளுத்தங் கஞ்சி சிறந்த உணவு.

# சிறுநீர் சார்ந்த நோய்கள் நீங்க, உளுந்து ஊறிய நீரை தினமும் பருகலாம்.

# தோல் நீக்கப்படாத உளுந்து எலும்புகளுக்கு பலத்தைக் கொடுக்கும். ‘எலும்புருக்கி’ நோய் தீரும் என்று குறிப்பிட்டிருக்கிறார் சித்தர் அகத்தியர்.

# உளுந்து மூலம் செய்யப்படும் உளுந்துத் தைலம், சித்த மருத்துவத்தில் வாத நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. வலிமை இழந்த தசைக்கு வலுவூட்ட உளுந்துத் தைலம் உதவுகிறது. தொக்கண முறைகளில் அதிக அளவில் உளுந்துத் தைலம் பயன்படுத்தப்படுகிறது.

# முளைகட்டிய உளுந்து மூட்டு வலிக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது.


# எலும்பு முறிவிற்கு தண்ணீரில் ஊற வைத்து, காய வைத்து,அரைத்த கறுப்பு உளுந்து மாவு முட்டை வெண்கரு இட்டு குழைத்து துணி சுற்றி கட்டுதல் சித்த மருத்துவ வழிமுறை

+++++++++++++++++
உரலில் இடக்கையால் மாவைத் தள்ள, வலக்கை ஆட்டுக்கல்லை சுழற்றிக்கொண்டிருந்தது. ஆம், அப்படி பக்குவமாக மாவாட்டிக்கொண்டிருந்தது உமையாள் பாட்டிதான்! 

“என்ன பாட்டி… கரண்ட் இல்லையா இல்ல, கிரைண்டர் ரிப்பேரா?” பாட்டியிடம் கேட்டுக்கொண்டே அருகிலிருந்த மரப்பலகை இருக்கையை பாட்டியின் அருகில் போட்டு அமர்ந்தேன். 


“வாப்பா… வா! நீ வந்தது நல்லதா போச்சு. மாவ கொஞ்சம் வெளியில போகாம அப்படியே தள்ளிவிட்டு பாட்டிக்கு ஒத்தாசை செய்யேன், கொஞ்சம் புண்ணியமா போகும்!” என்னிடம் உதவி கோரினாள் உமையாள் பாட்டி. “சரி பாட்டி… நானும் இட்லி சாப்பிடணுமில்ல, அதனால நான் ஹெல்ப் பண்றேன்.” 


கையை வாஷ் செய்துவிட்டு பாட்டிக்கு ஒத்தாசை செய்தேன். “இது இட்லி மாவு இல்ல, உளுந்த வடைக்கான மாவு” பாட்டி சொல்லி சிரித்தாள். “என்ன விசேஷம் பாட்டி! வடைகிடையெல்லாம் அமர்க்களப்படுது…?!”


 “விசேஷமெல்லாம் ஒன்னுமில்ல, நான் அடிக்கடி உளுந்தங் களி கிண்டி சாப்பிடுவேன். இன்னிக்கு வடை மேல ஆச வந்திடுச்சு! இந்த உளுந்த நம்ம உணவுல சேத்துக்கறது அவசியமானது, அதான்! ” பாட்டி பேசிக்கொண்டே மாவின் பதம் பார்த்துக்கொண்டாள். “ஓ உளுந்து அவ்வளவு முக்கியமானதா?!” 


“பின்ன… உளுந்த அவ்வளவு சாதாரணமா நெனச்சிடாத! நரம்பு மண்டலம் வலிமை பெறுவதற்கும் உடல் குளிச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திய அதிகரிக்கவும் உளுந்து நல்ல ஒரு உணவு. அதுமட்டுமில்லாம, பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கவும் பெண்களின் இடுப்பு வலிமை பெறவும் பக்கபலமா இருக்கு இந்த உளுந்து. 


அதோட, குழந்தை பெற்ற பெண்ணுக்கு பால் சுரப்பை அதிகமாக்குது. தினமும் நாம உளுந்த உணவுல சேத்தா மலச்சிக்கல், வயிறு உப்புசம் மாதிரியான பிரச்சனயெல்லாம் தீரும். அப்புறம்… இரத்தத்துல கொலஸ்ட்ரால் அளவ குறைச்சு இதயத்த பலப்படுத்துது இந்த உளுந்து.” 


“ஓ பாட்டி… பாட்டி…! நிறுத்துங்க மாவு நல்ல பதத்துக்கு வந்திருச்சு, எடுத்து சட்டியில அள்ளுங்க! “ஆங்… சொல்ல மறந்துட்டேன்பா! உளுந்த வடை, உளுந்தங் கஞ்சி சாப்பிட்டு வந்தா உன்ன மாதிரி இளைத்த உடலெல்லாம் பயில்வான் மாதிரி ஆயிடலாம்!” 


பாட்டி கேலிப்பார்வை பார்த்தபடியே மாவினை சட்டியில் அள்ளினாள். நான் வடையை ருசிக்கும் ஆர்வத்தில் பாட்டியின் வடைக்காக காத்திருந்தேன்! 


குறிப்புகள்: 

உளுந்து ஊற வைத்த நீரை மறுநாள் அதிகாலை அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும். 

4 தேக்கரண்டி உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும். 


வாத நோய் மற்றும் முடக்கு நோய்க்கு உளுந்து தைலம் (External use) உதவும். (உளுந்து தைலம் ஈஷா ஆரோக்யாவில் கிடைக்கும்)


No comments:

Post a Comment