Friday, June 17, 2016

யோகம்

மூச்சுக் கலை – “ஹம்ஸம்”

"ப்ராணயாமம்"

இடது நாசியில் ஓடும் சுவாசம் இடகலை,

வலது நாசியில் ஓடும் சுவாசம் பிங்கலை,

இரண்டு நாசியிலும் ஒரே நேரத்தில் ஓடுவது சுழுமுணை..

மூச்சை உள்ளே இழுப்பது பூரகம்,

சுவாசித்த காற்றை உள்ளே நிறுத்துவது கும்பகம்,

அந்த காற்றை வெளியே விடுவது ரேசகம்.

இந்த அடிப்படைகளை மனதில் கொண்டு இனிவரும் தகவல்களை அணுகிட வேண்டுகிறேன்.

மூச்சுக் கலையின் முதல் படி உள்ளே ஓடும் மூச்சினை கவனிப்பதும், உணர்வதுமதான்.

அந்த வகையின் இன்று எளிய பயிற்சி முறை ஒன்றை பார்ப்போம்.

இந்த பயிற்சியினை முதலில் ஐந்து நிமிடங்கள் என ஆரம்பித்து தினமும் கொஞ்சம் கொஞ்சமாய் நேரத்தை அதிகரிக்கலாம்.

முப்பது நிமிடங்கள் செய்ய முடிந்தால் நல்லது.

வெறும் வயிறுடன் அல்லது உணவு உண்டு இரண்டு மணி நேரம் கழிந்த நிலையில் செய்வது உத்தமம்.

தனிமையான இடத்தில் உடல தளர்வாக இருக்கும் படி அமர்ந்து கொள்ள வேண்டும்.

முதுகுத் தண்டு நேராய் இருத்தல் அவசியம்.

பத்மாசனம் அல்லது சுகாசனம் உகந்தது.

இப்போது வெறுமனே மூக்கின் வழியே சுவாசம் உள்ளே சென்று வெளியே வருவதை மட்டும் கவனியுங்கள்.

மனம் அதன் போக்கில் ஓடும்.

அதைப் பற்றி கவலை வேண்டாம்.

சில நாட்களில் மனம் குவியும்.

எனவே, இயல்பாக சுவாசம் ஓடுவதை மட்டும் கவனித்தால் போதும்.

ஒன்றிரண்டு நாட்கள் தொடர்ந்து செய்திட மனம் அடங்கி, கவனம் சுவாசத்தில் மனம் நிலைக்கும்.

இந்த நிலையில் சுவாசத்தின் சப்தத்தை உணர ஆரம்பிப்பீர்கள்.

ஆம்!, சுவாசத்திற்கு சப்தம் உண்டு.

இதனை நம் முன்னோர்கள், “சப்தமில்லாத சப்தம்” என்கின்றனர்.

மூச்சை உள்ளே இழுக்கும் சுவாசம் “ஸம்” என்ற சப்தத்துடன் போவதையும், மூச்சு வெளியேறும் போது அது “ஹம்” என்ற சப்தத்துடன் வெளியேறுவதையும் அவதானிக்கலாம்.

இதையே “ஹம்ஸம்” எனக் கூறுகின்றனர்.

“ஸோ”, “ஹம்” என்றும் சொல்வதுண்டு.

இந்த மூச்சில் அதன் சப்தத்தில் தொடர்ந்து லயித்திருக்க பரவச நிலை உண்டாகும்.

இதனையே செபிக்காத மந்திரம் எனச் சொல்வர்.

இதனை அஜபா ஜெபம், அஜபா காயத்திரி என்றும் கூறுவர்.

ஔவையார் அருளிய விநாயக அகவலில் அசபை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றது.

"குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமு"

தொடர்ந்து இந்த பயிற்சியினை செய்து வந்தால் மனம் பரவச நிலையை உணர ஆரம்பிக்கும்.

கவனம் குவிந்து, மனதின் ஆசாபாசஙள் விலகும்.

உடலில் புத்துணர்ச்சி தோன்றும்.

எண்ணம் தீர்க்கமாகும், கண்களில் தீட்சண்யம் மிளிரும்.

குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் கவனக் குவிப்புடன் மூச்சினை கவனிக்கும் இந்த தொடர் பயிற்சி செய்து வந்தால், சப்தமில்லாத சப்த மந்திரத்தின் மகிமையை உணர ஆரம்பிக்கலாம்.

எளிய பயிற்சிதானே...!

ஆர்வம் உள்ள எவரும் இதனை முயற்சிக்கலாம்...

"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம்"

1 comment:

  1. Nice! Please post on the sleeping posture for each day of the week for man, woman and children. Am I confusing it with breathing (left and right nostril) for each day of the week for men and women?

    ReplyDelete