Friday, April 1, 2016

திப்பிலி

திப்பிலி

திப்பிலி, காரம் மற்றும் லேசான இனிப்பு சுவையுடையது. உடல் சூட்டை அதிகரிக்க கூடியது. வாதம் மற்றும் கப நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது.

நுரையீரல் மற்றும் தலையின் சைனஸ் பகுதிகளில் தேங்கிய சளியை அகற்ற உதவுவதால் இதற்கு ‘கோழையறுக்கி’ என்ற சிறப்பு பெயரும் உண்டு.

திப்பிலி பசியை தூண்டும். இருமல், ஜுரம், தோல் நோய்கள், மூட்டு வலி, மூல தொந்தரவு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கங்களை நீக்க உதவுகின்றது. சிறந்த குரல் வளத்தை பெற துணைபுரியும். ரத்த சோகையை நீக்கும். மூளை தாதுகளை பலப்படுத்தும். ஆண்மை சக்தியை அதிகரிக்கச்செய்யும்.

 திப்பிலி மிளகை விட காரமானது. உடலுக்குள் அதி வேகமாக செயல்பட்டு வளர்சிதை மாற்றங்களை மேம்படுத்தும். உடலில் அதிக நேரம் வெப்பத்தை தேக்கி, உடலுக்கு சூட்டை அளித்து, ஊக்கியாக செயல்படும். நிணநீர் நாளங் களையும் சுத்தம்செய்யும்.

சுக்கு, மிளகு, திப்பிலி சேரும் திரிகடுகு சூரணத்தில் முக்கியமான கூட்டுப் பொருளாக திப்பிலி விளங்குகிறது. திப்பிலியை எந்த மருந்தில் சேர்த்தாலும் அதன் செயல் திறன் அதிகரிக்கும். அதனால் அதனை பல்வேறு முக்கிய சித்த மருந்துகளில் சேர்க்கிறார்கள்.

குளிர் காலத்தில் உண்டாகும் ஆஸ்துமா, மூக்கடைப்பு, நீரேற்றத்தால் உண்டாகும் தலைவலி மற்றும் மூட்டு வலிகளுக்கு திப்பிலி சிறந்த மருந்தாக திகழ்கிறது. சிறுவர்களுக்கு ஆஸ்துமாவால் உண்டாகும் மூச்சிரைப்பு, ஒவ்வாமை காரணமாக உண்டாகும் தொடர் தும்மலுக்கு 2 கிராம் திப்பிலி பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வெதுவெதுப்பான நீர் அருந்தவேண்டும். பெரியவர்கள் 2 கிராம் திப்பிலி பொடியை வெற்றிலையில்வைத்து தேன் கலந்து மென்று சாப்பிடவேண்டும்.

கல்லீரல், மண்ணீரல் வீக்கம் கொண்டவர்கள் 100 கிராம் திப்பிலியை வறுத்து பொடி செய்து, 100 கிராம் கரிசலாங்கண்ணி கீரை பொடியுடன் கலக்க வேண்டும். அத்துடன் 100 கிராம் பொடித்த நெற்பொரி, 100 கிராம் நாட்டு சர்க்கரை கலந்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்விக்கலையும் இது குணப்படுத்தும்.

திப்பிலி உஷ்ண தன்மை கொண்டதாக இருப்பதால், பெண்களுக்கு ஆரோக்கியமான சினைமுட்டை உருவாவதற்கு உதவி புரிகிறது. 2 கிராம் திப்பிலி பொடியை 1/2 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்யில் கலந்து மாதவிடாய் ஏற்பட்ட இரண்டாம் நாளிலிருந்து ஆறுநாட்கள் சாப்பிட்டால் ஆரோக்கியமான சினைமுட்டை உருவாகும். இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வெதுவெதுப்பான நீர் அருந்தவேண்டும்.

மூட்டு வலிக்கு திப்பிலி பொடி 2 கிராம் எடுத்து 100 மி.லி. பாலில் கலந்து தினமும் பருகவேண்டும். 30 நாட்கள் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் வலி, முதுகுவலி மற்றும் வாத நோய்களுக்கு கண்டந்திப்பிலி 5 கிராம் அரைத்து பாலில் கலந்து குடிக்கவேண்டும்.

திப்பிலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. காய கற்ப மூலிகை. ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை நோய்களுக்கு சிறந்த முதலுதவி மருந்தாக இது செயல்படுகிறது. திப்பிலியில் தயாரிக்கப்படும் ‘திப்பிலி ரசாயனம்’ என்ற மருந்து ஆஸ்துமா, மூக்கடைப்பு, சைனஸ் தலைவலிக்கு சிறந்தது. 3 கிராம் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வரவேண்டும்.

No comments:

Post a Comment