கஞ்சியில் இருக்கு ஆரோக்கிய ரகசியம்!
இன்றைய தலைமுறைக்கு கஞ்சி என்றால் என்ன என்றே தெரியாது. இட்லி, பொங்கல், பூரி, தோசை எனக் காலை உணவு மாறிவிட்டது. இந்த ஞாயிற்றுக்கிழமை அரைத்த மாவில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை இட்லி, தோசை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா என்கிற கவலை இல்லாமல், வயிற்றை நிரப்புவது என்றாகிவிட்டது. இது மிக மிகத் தவறு. எந்த நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோர்களின் முக்கிய உணவே பாரம்பரிய தானியங்களில் செய்த கஞ்சியும் கூழும்தான். அது எல்லாம் நோயாளிகளுக்கு என்று ஒதுக்கிவிட்டு ஜங்க் ஃபுட் தேடிப்போவது நாகரிகமாகத் தெரியலாம். ஆனால் ஆரோக்கியமாக இருக்காது.
நோய் நம்மை நெருங்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறுதானியக் கஞ்சியும் கூழும் உதவி செய்யும் என்கிறார் தேனி, காமயகவுண்டன்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கே.சிராஜுதீன்.
சிறுதானிய உணவான வரகு, கல்லீரலில் தேங்கியுள்ள பித்தநீரை வெளியேற்ற உதவும். அதிகமாக ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து.
குடல்புண் மற்றும் உணவுக்குழாயில்் ஏற்படும் புண்ணுக்கு சாமை நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் அளவையும் கட்டுக்குள்வைக்க உதவும். கழிச்சலைக் கட்டுப்படுத்தும்.
இளைத்த உடல் வலுவாகவும், உடல் எடை கூடவும் தினை உதவுகிறது. வயதானவர்களுக்கு மூட்டுகளில் உள்ள தேவையற்ற நீரினை நீக்க தினை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் (chronic renal disease), கால் வீக்கம், முக வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவும். குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள கசடுகளை வெளியேற்றவும், தாய்ப்பால் சுரக்கவும் தினை கைகொடுக்கும்.
பட்டைத் தீட்டப்படாத சிவப்பு அரிசியில் நார்ச்சத்து, வைட்டமின்- டி1 நிறைந்ததுள்ளது. இதனால் வாய் ஓரங்களில் ஏற்படும் புண் (angular cheilitis) குணமாகும். சர்க்கரை நோய் கட்டுப்படு்ம். புரதம் இதில் அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
கேழ்வரகு நார்ச்சத்து நிறைந்த உணவு. இதில் அமினோ அமிலங்கள், லிசித்தின் மற்றும் மெத்யோனைன் போன்றவை அடங்கியுள்ளன.
கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகப் பாதிப்பு அடைவதால் ஏற்படும் பெருவயிறு நோய் இருப்பவர்களுக்கு கேழ்வரகுக்கூழ் அற்புதமான உணவு. பித்தத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும். இதில் வைட்டமின்சி மற்றும் இரும்புச் சத்து இருப்பதால், ரத்தச்சோகையைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், குடல் புற்றுநோயினைத் தவிர்க்கவும் உதவுகிறது.
கேழ்வரகு பாதாம் கஞ்சியைக் குடிப்பதால், சதைகளுக்கு ஊட்டம் கிடைக்கும். வைரல் காய்ச்சலில் குணமடைந்தவர்களுக்கு, மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனைக் குறைக்க, கேழ்வரகு பாதாம் கஞ்சி பயன்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் (primary complex) காசநோயினைக் கட்டுப்படுத்த உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மருத்துவர் சிராஜுதீன் பகிர்ந்துகொண்ட உணவுமுறையை டாக்டர் விகடன் வாசகர்களுக்காக செய்து காட்டியிருக்கிறார் ஆப்பிள் மில்லட் உணவகத்தின் செஃப் சுப்ரமணியன்.
கேழ்வரகுக் கூழ்
தேவையானவை: கேழ்வரகு 200 கிராம், தண்ணீர் 4 டம்ளர், மோர் (அ) காய்ச்சிய பால் 3 டம்ளர், சின்ன வெங்காயம் 6, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை தேவையான அளவு, பச்சை மிளகாய் 3, கடுகு ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு, மல்லித்தழை தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகினை நீரில் நன்றாக ஊறவைத்து, மெல்லியத் துணியில் கட்டி, முளைக் கட்டவும். முளை விட்டதும், கடாயில் போட்டு வறுத்து, மிக்ஸியில் அரைக்கவும். இதில், கெட்டியாக இருக்கும் அளவுக்கு நீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறத்தில் வதக்கி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். கடைசியில் மோர் (அ) பால் சேர்த்து இறக்கவும்.
கேழ்வரகு பாதாம் கஞ்சி
தேவையானவை: கேழ்வரகு 200 கிராம், பாதாம் பருப்பு 50 கிராம், தண்ணீர் 4 டம்ளர், மோர் 3 டம்ளர், சின்ன வெங்காயம் 6, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை தேவையான அளவு, பச்சை மிளகாய் 3, கடுகு ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு, மல்லித்தழை தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகினை நீரில் ஊறவைத்து, மெல்லிய துணியில் முளை கட்டவும். இதைக் கடாயில் வறுத்து, மிக்ஸியில் அரைத்துக் கெட்டியாக இருக்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்க்கவும். பாதாமை மிக்ஸியில் போட்டு அரைத்துச் சேர்க்கவும். இதை நன்றாகக் கொதிக்கவைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். மோர் சேர்த்து இறக்கவும்.
சிறுதானியக் கஞ்சி
தேவையானவை: சாமை, திணை, வரகு, சிவப்பரிசி, பாசிப்பருப்பு தலா 50 கிராம், மோர் (அ) காய்ச்சிய பால் 3 டம்ளர், தண்ணீர் 4 டம்ளர், சின்ன வெங்காயம் 6 முதல் 8, சீரகம் ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை தேவையான அளவு, பச்சைமிளகாய் 3, கடுகு ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், மல்லித்தழை, உப்பு தேவையான அளவு.
செய்முறை: சாமை, தினை, வரகு, சிவப்பரிசி, பச்சைப்பருப்பு இவற்றைத் தனித்தனியாக கடாயில் வறுக்க வேண்டும். சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு, நன்றாகக் குருணையாகப் பொடிக்க வேண்டும். இதில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும்.
கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கடுகு,பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். பிறகு மோர் (அ) பால் சேர்க்கவும். இதேபோல், சிறுதானியங்களைத் தனித்தனியாக கஞ்சி தயாரித்துப் பருகலாம்.
Wednesday, November 11, 2015
சிறுதானிய மகிமை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment