மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி
விடியறதுக்கு முன்பே, விசுக்கென விழிப்பு வந்துவிட்டது வாசம்பாவுக்கு. அரைகுறைத் தூக்கத்துடன் எழுந்து கண்ணாடியைப் பார்த்தவள், 'என்ன இது... முகம், கை எல்லாம் மஞ்சளா இருக்கு...' எனப் பதறினாள்.
'காமாலைக் கண்ணுக்கு, கண்டதெல்லாம் மஞ்சள்’னு அம்மணி சொன்னது ஞாபகத்துக்கு வர, அலறியடித்து அம்மணியிடம் ஓடினாள்.
'இங்க பாரேன் அம்மணி, என் முகமெல்லாம் மஞ்சளாத் தெரியுது. காமாலை கீமாலை வந்திருக்குமோனு பயமாயிருக்குடி...' என வந்து நின்றவளை, பக்கம் வந்து பார்த்தாள் அம்மணி.
'உன் கண்ணு மஞ்சளாத் தெரிஞ்சா, காமாலைனு சந்தேகப்படலாம். நேத்து முகத்துக்குப் பூசின மஞ்சளைப் பார்த்திட்டு மஞ்சள் காமாலைனு ஓடிவர்றியே, உன்னை நெனைச்சா சிரிப்புதான் வருது வாசம்பா. காமாலை வருமோனுகூட இனிமே நீ கவலைப்பட வேண்டாம். வா... கீழாநெல்லியை அரைச்சுத் தாரேன். இதை மாசம் ஒருநாள் சுண்டைக்காய் அளவுக்கு வெறும் வயித்துல சாப்பிடு. வாழற நாள் முழுசுக்கும் மஞ்சள் காமாலை எட்டிக்கூடப் பார்க்காது. கல்லீரல் வீக்கம், பித்தப் பையில் கல்கூட வராது.'
'சரி... வராம இருக்க வழி சொல்லிட்ட. வந்தா, எப்படிச் சாப்பிடணுமாம்?'
'நெல்லிக்காய் வத்தல், சீரகம் ரெண்டையும் அம்பது, அம்பது கிராம் எடுத்துப் புடைச்சு, ஒரு வாரம் தொடர்ந்து ரெண்டு வேளை சாப்பிட்டு வந்தா, மஞ்சக்காமாலை நோயே இருந்த இடம் தெரியாம மறைஞ்சிடும். கீழாநெல்லி, சின்ன வெங்காயம், சீரகம் மூணையும் சேர்த்து அரைச்சு மோர்ல கலந்து குடிச்சா, மூணே நாள்ல மஞ்சக் காமாலை குணமாயிடும்.
பருப்புக் கீரை, கீழாநெல்லி இரண்டையும் சமமா எடுத்து, மஞ்சள் சேர்த்து அரைச்சு சாப்பிட்டா, கல்லீரல் வீக்கம் குறைஞ்சிடும். சரி... கிளம்பு. நம்ம பூசாரி மாயாண்டி வீட்டு விசேஷத்துக்குக் கூப்பிட்டிருக்காகளே... போகவேணாமா வாசம்பா... எடுத்துட்டுப் போக வாழைப்பழக் குலையையே பறிச்சிவெச்சிருக்கேன்!'
'அடியேய் அம்மணி... விருந்துக்கு ஆசைப்பட்டுப் போய் வயிறு காயறதைவிட, பழையதைத் தின்னுட்டுப் படுத்துக்கிடக்கலாம். 'வாயைக் கொண்டுபோனவ நடுவீட்டுல இருப்பாளாம். வாழைப்பழம் கொண்டுபோனவ வாசல்ல வைப்பாளாம்’ அந்தக் கதையா ஆகிடும். வேற எந்த நோய்க்கெல்லாம் கீழாநெல்லி மருந்தாயிருக்கு அம்மணி... அதைச் சொல்லு முதல்ல?''
''அஷ்ட கர்ம மூலிகைகள்ல ஒண்ணு இந்தக் கீழாநெல்லி. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட அத்தனை நோய்க்கும் கீழாநெல்லி கைகண்ட மருந்து.
கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் இடிச்சுச் சாறு எடுத்து, அதோட சம அளவு பால் சேர்த்து, அதுல நல்லெண்ணெய் விட்டு அடுப்புல வெச்சுக் காய்ச்சணும். இது பாதியா சுண்டினதும் இறக்கி ஆறவெச்சு, ஒரு பாட்டில்ல ஊத்தி வெச்சுக்கலாம். வாரம் ஒரு தடவை, இந்தத் தைலத்தைத் தலையில தேய்ச்சு, சீயக்காய் போட்டு அலசினா, பித்த மயக்கம், தலைச்சுத்தல், சோர்வு, கண் எரிச்சல் எல்லாமே சரியாயிடும்.
கீழாநெல்லி இலையை உப்பு சேர்த்து அரைச்சு, அந்த விழுதை, சொறி சிரங்கு மேல பூசினால், குணமாகறதோட, திரும்ப வராமலும் இருக்கும். வெட்டுக்காயத்துக்கும் போடலாம்.
சுக்கு, மிளகு, சீரகம் எல்லாம் பதினைஞ்சு கிராம் எடுத்து ஒண்ணுரெண்டா நுணுக்கி, எட்டு டம்ளர் தண்ணீரை விட்டுக் காய்ச்சணும். காய்ச்சி இறக்கறப்ப கீழாநெல்லி இலையைக் கசக்கிப் போட்டு, வெல்லம் சேர்த்துக் கலக்கி வடிகட்டிக் குடிக்கணும். மூணு நாளைக்கு, காலைல வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, தலை பாரம், தலைச்சுத்தல், மயக்கம் எல்லாமே போயிடும்.''
''முடி வளர்றதுக்கு ஏதாச்சும் கீழாநெல்லில வைத்தியம் இருக்கா அம்மணி...?''
''அதானே பார்த்தேன்... எங்க விஷயத்துக்கு வரலியேனு நெனைச்சேன்.
கீழாநெல்லி வேரை நல்லா சுத்தம் செஞ்சு சின்னத் துண்டா நறுக்கிக்கணும். இதைத் தேங்காய் எண்ணெய்ல போட்டுக் காய்ச்சி, தலையில தடவிட்டு வந்தா, வழுக்கைத் தலையில்கூட முடி முளைக்கும்...'' என்ற, அம்மணியைப் பார்த்து முறைத்த வாசம்பா..
''உனக்கு ரொம்பக் குசும்புதான் அம்மணி... எனக்கென்ன வழுக்கையா விழுந்திடுச்சு?'' என்று முறைக்க,
''பின்னால(?) வர்ற வழுக்கைக்கு முன்னாலயே வைத்தியம் சொன்னேன்'' என்று அம்மணி சொல்ல, சிரித்தபடியே இருவரும் தெருவைக் கடந்தனர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மருத்துவ செய்தி
உடல் அரிப்பாக உள்ளதா? இதோ குணமாக்கும் மூலிகை
உடல் அரிப்பாக உள்ளதா? இதோ குணமாக்கும் மூலிகை
உடல் அரிப்பு என்பது குழந்தைகள் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை.
இதனால் அடிக்கடி மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் வீட்டிலிருந்தபடியே இந்த அரிப்பை விரட்ட அற்புதமான மூலிகை தாவரம் கீழாநெல்லி.
இதனால் அடிக்கடி மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் வீட்டிலிருந்தபடியே இந்த அரிப்பை விரட்ட அற்புதமான மூலிகை தாவரம் கீழாநெல்லி.
இது பல நோய்களை தீர்க்ககூடிய வல்லமை படைத்தது. இது ஒரு சிறு தாவர வகையை சேர்ந்தது.
இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர்.
இதை பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.
இந்த செடியின் தண்டு, வேர் மற்றும் இலைகள் என அனைத்தும் பயன்தரக் கூடியவை.
கீழாநெல்லியின் மகத்துவங்கள்
கீழாநெல்லியினால் தயாரித்த தையலம் கை,கால் எரிச்சல், கண்களின் உஷ்ணத்தன்மை, தலைசுற்றல் மயக்கம், பித்தக் கிறுகிறுப்பு, அதிக போகத்தினால் உண்டான அசதி அகியவற்றை நீக்கும் குணமுடையது.
குளிர் காய்ச்சலுக்கு கீழாநெல்லி ஒரு பங்கும், மிளகு அரை பங்கும், வெள்ளைப் பூண்டு அரை பங்கும் சேர்த்து நன்றாக கரைத்து மிளகளவு மாத்திரைகளாகச் செய்து காலை மாலை கொடுக்க காய்ச்சல் குணமாகும்.
ரத்த குறைவினால் ஏற்படும் சோகை வியாதிக்கும் கீழாநெல்லி ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
கல்லீரல், மண்ணீரல், சிறு நீரகங்களின் வீக்கத்தையும் குறைத்து இரத்தத்தை சுத்தமடைய செய்கிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று மாந்தம், சீதபேதி முதலிய நோய்களுக்கும் கீழாநெல்லி உதவுகிறது.
இதை சுண்டைக்காயளவு பாலோடு அல்லது நீரிலோ கொடுத்தால் எந்த நோய்களும் அண்டாமல் இருக்கும்.
இதன் இலைகளை தேவயான அளவு அரைத்து உடம்பில் தேய்த்து குளித்தால், உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிறு புண்கள் ஒழிந்து விடும்.
No comments:
Post a Comment