Showing posts with label Backbone. Show all posts
Showing posts with label Backbone. Show all posts

Thursday, August 6, 2015

முதுகெலும்பு / முதுகு வலி / Backbone

மூளையும் மற்ற உறுப்புகளும் தகவல் தொடர்புகொள்வதற்கான பாதையாக இருப்பது முதுகுத் தண்டுவடம். முதுகெலும்புத் தொடர்களுக்கு மையத்தில் மிகப் பாதுகாப்பாக இந்தப் பாதை உள்ளது. இதில், இருந்து வரும் நரம்புகள், உடல் முழுவதும் பரவியுள்ளன. லட்சக்கணக்கானோர், இந்த முதுகெலும்புத் தொடரில் வரும் வலியால் அன்றாடம் அவதியுறுகின்றனர். முதுகு வலியிலிருந்து விடுபட்டு, உடலை ஆரோக்கியமாகவைத்துக்கொள்வதற்கான வழிகள் இதோ...

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமரும்போது, முதுகுத் தண்டுவடத்தில் 40 சதவிகித அழுத்தம் ஏற்படுகிறது. எனவே அவ்வப்போது எழுந்து நடந்து முதுகெலும்புக்கு ஓய்வுகொடுக்க வேண்டும். நாற்காலியில் அமரும்போது முதுகின் அனைத்துப்பகுதிகளும், குறிப்பாக கீழ் முதுகு நாற்காலியில் படும்படி அமர வேண்டும்

தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி, யோகா பயிற்சிகள் செய்யலாம்.

முதுகெலும்புத் தசையைத் தளர்வாக்கி, உறுதிப்படுத்தும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், முதுகெலும்பை வலுப்படுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும்.

பெண்களுக்கு முதுகு வலி ஏற்பட, ஹை ஹீல்ஸ் ஒரு முக்கியக் காரணம். ஹை ஹீல்ஸ் அணியும்போது, அது முன்னங்காலில் அழுத்தத்தை ஏற்படுத்தி முதுகெலும்பைப் பாதிக்கிறது.

அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்கும்போது கவனம் தேவை. நின்றபடியே முதுகை வளைத்துத் தூக்கினால், முதுகெலும்பு பாதிக்கப்படும். எடையுள்ள பொருட்களைத் தூக்கும் முன், அதன் அருகில் சென்று, முட்டியைக் கொஞ்சம் மடக்கி, முதுகை நேராகவைத்து, தூக்க வேண்டும்.

அதிக எடைகொண்ட பொருளை, பையை ஒரு கையில் மட்டும் அல்லது ஒரு பக்க தோளில் மாட்டித் தூக்கிச் செல்வதும் தவறு. 10 கிலோ எடை கொண்டதாக இருந்தால், ஐந்து, ஐந்து கிலோவாகப் பிரித்து இரண்டு கைகளில் தூக்கிச் செல்ல வேண்டும்.

மிகவும் கடினமான அல்லது மிகவும் மென்மையான மெத்தைக்குப் பதில், நடுத்தரமான அளவு மென்மையான மெத்தையில் படுக்க வேண்டும்.

உடல் எடையைக் கட்டுக்குள்வைத்து, எப்போதும் துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவது, முதுகு வலி வருவதைத் தவிர்க்கும். அதிக உடல் எடை, தொப்பை இருந்தால், அதிக அழுத்தத்தால் கீழ் முதுகு வலி வரக்கூடும்.

போதுமான அளவு நீர் அருந்துவது முதுகெலும்பைப் பாதுகாக்கும். முதுகெலும்புத் தொடரில் உள்ள டிஸ்க் மற்றும் மென்மையான திசுக்களுக்கு நீர்ச்சத்து அவசியம். உடலில் நீர்ச்சத்து குறையும்போது டிஸ்க்குகளின் அளவு சுருங்கி, பாதிப்பை ஏற்படுத்தும்.

வலியைப் புறக்கணிக்கக் கூடாது. எப்போதாவது ஒரு முறை முதுகு வலி வந்தால், பிரச்னை இல்லை. நான்கைந்து நாட்களுக்கு நீடித்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். வலியைப் பொறுத்துக்கொண்டு இருந்தால், முதுகு வலி மேலும் அதிகரிக்கும்.