Sunday, September 13, 2015

மிளகு




மிளகு..!
தாவரப் பெயர் -: PIPER NIGRUM.
"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.
வளரியல்பு -
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு பரவியது . மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் இதுவே மிளகு. இதன் கொடியை கட்டிங் செய்து இனப்பெருக்கம் செய்யலாம்.
மருத்துவப் பயன்கள்-
விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது என்பதை குறிக்கவே “பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்றார்கள் நம் முன்னோர்கள்.
பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்க்காது.
மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.
மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு, கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம்.
உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.
மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும்
தொண்டைக் கம்மல், தொண்டை வலி, வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாள்களிலேயே நல்ல மாற்றத்தை காணலாம்..
மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் கொடுத்து வர வாந்தி பேதி நிற்கும்.
பால்வினை நோய்களில் பல வகை உண்டு. அதில் ஒன்று பிறப்புறுப்புக்களில் புண்கள் தோன்றுவது. இது குணமாக மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன் வேர் 18 கிராம் என இரண்டையும் போதிய அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்கு அரைத்து, கடுகளவு மாத்திரையாகச் செய்து காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.
சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.
மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் சகல விஷக்கடிகளும் முறிந்துவிடும்.
சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றுபோட்டு வர சரியாகும்.
மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும்.
மிளகைப் ஒரு ஸ்பூன் எடுத்து அதை பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்து சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.
மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.
மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 2-3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும்.
100 கிராம் வில்வ இலை சூரணத்துடன் 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு வருடத்தில் ஆஸ்துமா குணமாகும்.
சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.
அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.
தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும்.
அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.
சமையலில் மிளகாய் தூளை குறைத்து மிளகை அதிகம் சேருங்கள். மிளகு தூள் செய்து வீட்டில் எப்போதும் வைத்துகொள்ளுங்கள். கடைகளில் விற்கப்படும் மிளகு தூளை தவிருங்கள். ஆரோக்கிய வாழ்விற்கு மிளகு மிக அவசியம் என்பதை மறவாதீர்கள் !!

++++++++++++++++++++++
மிளகு குழம்பு
தேவையான பொருட்கள்:
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – 1 துண்டு
கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய் – 50 கிராம்
கறிவேப்பிலை – சிறியளவு
வெல்லம் – சிறியளவு
புளி - 1 எலுமிச்சம் பழம் அளவு
செய்முறை :
கடாயில் சிறிது நல்லெண்ணெயை விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை பொரித்து எடுத்து மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
புளியை கெட்டியாக கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மீதி எண்ணையை கடாயில் ஊற்றி, அறைத்த விழுதை போட்டு நன்கு கிளறி அதில் கெட்டியாக கரைத்து வைத்து புளியுடன் உப்பு சேர்த்து நன்கு கொதித்தவுடன் எண்ணெய் மிதக்கும் போது சிறிது வெல்லம் பொடி சேர்த்து இறக்கவும்.

No comments:

Post a Comment